தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறை இன்னும் நிற்கவில்லை - தேசிய மனித உரிமைகள் ஆணையம் கருத்து
தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறை இன்னும் நிற்கவில்லை என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.
நாட்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளை தடுப்பது எப்படி?, அதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்கள் தொடர்பான ஒரு விவாதத்துக்கு டெல்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. இது திறந்தவெளி விவாதமாக இருந்தது.
இதில் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் தியானேஷ்வர் எம்.முலே தலைமை தாங்கி பேசும்போது, 'போதிய சட்டங்கள் மற்றும் சட்ட விதிகள் செயல்படுத்தப்பட்ட போதிலும், நாட்டில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் சமூகங்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் பாகுபாடுகள் இன்னும் நிறுத்தப்படவில்லை. மேற்படி சமூகத்தினரின் சமூக மற்றும் பொருளாதார விடுதலைக்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வன்முறை மற்றும் பாகுபாடு பற்றிய சில சமீபத்திய ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி, அவர்களது பாதுகாப்புக்கான 1989-ம் ஆண்டின் சட்டம் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக விவாத அமர்வை தொடங்கி வைத்த மனித உரிமைகள் ஆணைய இணைச்செயலாளர் தேவேந்திரகுமார், "தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு குறைந்த தண்டனை விகிதம் கவலைக்குரியது" என்று கூறினார். விவாத அமர்வில் ஆணைய பதிவாளர் சுரஜித்டே மற்றும் மூத்த அதிகாரிகள், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், பழங்குடியினர் விவகார அமைச்சக அதிகாரிகள், டெல்லி போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.