டெல்லியின் புதிய துணைநிலை கவர்னராக வினய்குமார் சக்சேனா பதவியேற்பு..!
டெல்லியின் 22-வது துணைநிலை கவர்னராக வினய்குமார் சக்சேனா இன்று பதவியேற்றார்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியின் 21-வது துணைநிலை கவர்னராக செயல்பட்டு வந்தவர் அனில் பைஜால். 1969 பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான பைஜால் கடந்த் 2016-ம் ஆண்டு முதல் டெல்லி துணைநிலை கவர்னராக செயல்பட்டு வந்தார்.
இதற்கிடையில், 76 வயதான பைஜால் கடந்த 18-ம் தேதி டெல்லி துணைநிலை கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பைஜால் தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. பைஜாலின் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து டெல்லியின் புதிய துணைநிலை கவர்னராக வினய் குமார் சக்சேனாவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் இன்று வினய் குமார் சக்சேனா டெல்லியின் 22-வது துணைநிலை கவர்னராக பதவியேற்றார்.
ராஜ் நிவாசில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விபின் சங்கி அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தலைமைச் செயலாளர் நரேஷ்குமார், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதிய துணைநிலை கவர்னராக பதவியேற்றுள்ள வினய் குமார் மத்திய காதி மற்றும் கிராமப்புற தொழில்துறை ஆணையம் தலைவராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.