தார்வாருக்குள் செல்ல வினய் குல்கர்னி எம்.எல்.ஏ.வுக்கு அனுமதி மறுப்பு


தார்வாருக்குள் செல்ல வினய் குல்கர்னி எம்.எல்.ஏ.வுக்கு அனுமதி  மறுப்பு
x
தினத்தந்தி 7 July 2023 12:15 AM IST (Updated: 7 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தார்வார்க்குள் செல்ல வினய்குர்கர்னி எம்.எல்.ஏ.வுக்கு அனுமதி மறுத்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

உப்பள்ளி-

தார்வார்க்குள் செல்ல வினய்குர்கர்னி எம்.எல்.ஏ.வுக்கு அனுமதி மறுத்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வினய் குல்கர்னி

தார்வார் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருந்த பா.ஜனதா பிரமுகர் லோகேஷ் கவுடா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இவரது கொலையில் காங்கிரஸ் முன்னாள் மந்திரியும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான வினய் குல்கர்னிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் லோகேஷ் கவுடா கொலையில் முன்னாள் மந்திரி வினய் குல்கர்னிக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பலமுறை ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் வினய் குல்கர்னி ஜாமீன் பெற்றார். ஆனால் அவர் தார்வார் நகருக்குள் செல்ல கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை விதித்தது.

அனுமதி மறுப்பு

இதையடுத்து சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தார்வார் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வினய் குல்கர்னி போட்டியிட்டார். அப்போது, தேர்தலில் போட்டியிடுவதால் தார்வாருக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் வினய் குல்கர்னி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும், தார்வாருக்குள் செல்லாமலேயே வினய் குல்கர்னி வெற்றி பெற்றார். இந்த நிலையில், தான் தார்வார் எம்.எல்.ஏ.வாக உள்ளதால் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தார்வாருக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் வினய் குல்கர்னி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டு, வினய் குல்கர்னி தார்வாருக்குள் செல்ல அனுமதி மறுத்து உத்தரவிட்டது. மேலும் அவரது மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் தார்வாருக்குள் செல்வதில் சிக்கல் நீடிக்கிறது.


Next Story