அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டும் கிராம பஞ்சாயத்து துணை தலைவர்; அலுவலகத்தில் வைத்து பூட்டி மக்கள் போராட்டம்


அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டும் கிராம பஞ்சாயத்து துணை தலைவர்; அலுவலகத்தில் வைத்து பூட்டி மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2022 12:30 AM IST (Updated: 4 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டும் கிராம பஞ்சாயத்து துணை தலைவரை, மக்கள் அலுவலகத்தில் வைத்து பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிக்கமகளூரு;


அரசு நிலத்தை ஆக்கிரமித்து...

சிக்கமகளூரு அருகே உள்ள கே.பி.ஹள்ளி கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இந்த கிராம பஞ்சாயத்து துணை தலைவராக இருந்து வருபவர் தயானந்த். இவர் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளி அருகே உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து தனக்கு வீடு கட்டி வந்துள்ளார்.

மேலும் அதன் அருகே தனது தந்தைக்கும் ஒரு வீடு கட்டி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த கிராம மக்கள் அவரை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

போராட்டம்

இதையடுத்து அவர் தற்காலிகமாக கட்டுமான பணிகளை நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் அதே இடத்தில் கட்டுமான பணியை தொடங்கியதாக தெரிகிறது. இதையறிந்த கிராம மக்கள் நேற்று ஒன்று சேர்ந்து கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் தயானந்த் மற்றும் வளர்ச்சித்துறை அதிகாரி ஆகியோரை அலுவலகத்தில் உள்ளே வைத்து கதவை பூட்டி போராட்டத்தில் ஈடு்பட்டனர்.

பின்னர் ஆக்கிரமிப்பு நிலத்தில் வீடு கட்டுவதை நிறுத்தாவிட்டால் போராட்டத்தை கைவிட போவதில்லை என தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சிக்கமகளூரு புறநகர் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர்.

போலீசார் குவிப்பு

அங்கு வந்த அவர்கள் போராட்டத்தை கைவிடும்படி தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பஞ்சாயத்து அலுவலகத்தின் கதவை திறந்து விட்டனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story