தேர்தலில் வெற்றி: இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்வு
நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது. வாக்குப்பதிவு காலை 10 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு நிறைவடைந்தது.
மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர் (71), எதிர்க்கட்சிகளின் சார்பில் மார்கரெட் ஆல்வா (80) ஆகியோர் போட்டியிட்டனர்.
மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்ந்து 780 எம்.பி.க்கள் உள்ளனர். இதில், 725 பேர் வாக்களித்தனர். 92.9 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்று புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகளும் பெற்றுள்ளனர்.