இந்திய அரசியலமைப்பிற்கு அச்சமின்றி சேவை செய்வதே எனது ஒரே கடமை - துணை ஜனாதிபதி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா
துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மார்கரெட் ஆல்வா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
புதுடெல்லி,
துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மார்கரெட் ஆல்வா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
1942இல் கர்நாடகாவின் மங்களூரில் பிறந்த மார்கரெட் ஆல்வா மங்களூர், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரில் கல்வி பயின்றவர். மவுண்ட் கார்மல் கல்லூரியில் பி.ஏ பட்டமும், அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டமும் பெற்றார்.
ஆறு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட மாநிலங்களவைக்கு, அவர் தொடர்ந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். பெண்களுக்கான அதிகாரமளித்தல் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும் ஐந்து ஆண்டுகள் இருந்தார். அவருக்கு இப்போது 80 வயதாகிறது.
ஆல்வா முதன்முதலில் 1974இல் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நாடாளுமன்றத்தில் 30 ஆண்டுகள் பல முக்கியமான மற்றும் மதிப்புமிக்க குழுக்களில் பணியாற்றினார். மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
இந்நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்த பின் அவர் கூறியதாவது:-
இந்திய துணை ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது, எனக்கு கிடைத்துள்ள பாக்கியம் மற்றும் மரியாதையாகும். துணை ஜனாதிபதி பதவிக்கான எனது வேட்புமனுவை ஆதரிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தது "யதார்த்த இந்தியாவின் உருவகம்".
வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதால் தேர்தல்களை கண்டு பயப்படும் ஆள் நான் இல்லை. அவை என்னை பயமுறுத்தவில்லை. ஆனால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்துள்ள பல எம்.பி.க்களின் நம்பிக்கையே, நாட்டு மக்களை ஒன்றிணைத்து ஒரு வலுவான ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க உதவும்.
நாம் இந்த நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும், வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறோம், வெவ்வேறு மதங்களையும் பழக்கவழக்கங்களையும் பின்பற்றுகிறோம். வேற்றுமையில் நமது ஒற்றுமையே நமது பலம்.
நமக்கு முக்கியமானவற்றிற்காக நாங்கள் போராடுகிறோம், ஜனநாயகத்தின் தூண்களை நிலைநிறுத்தவும், நாட்டின் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தவும் போராடுகிறோம்.
நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமான இந்தியாவுக்காகவும், ('சாரே ஜஹான் சே அச்சா') உலகின் மற்ற பகுதிகளை விட சிறந்து விளங்கும் இந்தியாவுக்காகவும் நாங்கள் போராடுகிறோம். அனைவருக்கும் மரியாதை கிடைக்கும் இந்தியா வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக, கவர்னராக, ஐ.நா.வில் இந்தியாவின் பெருமைக்குரிய பிரதிநிதியாக, நான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் செலவிட்டதற்காக, ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக கருதுகிறேன். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் எனக்கு கிடைத்த இந்த நியமனம் ஒரு அங்கீகாரம் என்று நான் நம்புகிறேன்.
இந்திய அரசியலமைப்பிற்கு அச்சமின்றி சேவை செய்வதே எனது ஒரே கடமையாக கொண்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.