இருவேறு பாலியல் வழக்குகளில் தீர்ப்பு; தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை, மற்றொருவருக்கு 20 ஆண்டு சிறை


இருவேறு பாலியல் வழக்குகளில் தீர்ப்பு; தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை,   மற்றொருவருக்கு 20 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

இருவேறு பாலியல் வழக்குகளில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சிவமொக்கா போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவமொக்கா;

ஆபாசமாக சித்தரித்து

சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா பகுதியை சேர்ந்தவர் திம்மப்பா(வயது 42). இவர், அதே பகுதியில் வசித்து வரும் இளம்பெண்ணை கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் செல்போனில் வீடியோ எடுத்து அதனை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் சிவமொக்கா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பின்னர் அவர் மீது சிவமொக்காவில் உள்ள போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி லதா தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றம் சாட்டப்பட்ட திம்மப்பா மீது குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.44 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

10 வயது சிறுமி பலாத்காரம்

இதேபோல் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 38) என்பவர் அந்த பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கதறி அழுதப்படி சொன்னார். இதைகேட்டு அதிர்ந்து போன பெற்றோர் பத்ராவதி புறநகர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் அப்போதைய சி.பி.ஜ.அதிகாரி மஞ்சுநாத் போக்சோ வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை சிவமொக்கா கோர்ட்டில் நடந்து வந்தது.

ஆயுள் தண்டனை

மேலும் இதுகுறித்து கோர்ட்டில் போலீசார் சார்பில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து வழக்கு விசாரணை நேற்றுமுன்தினம் முடிவடைந்த நிலையில் நீதிபதி மோகன் தீர்ப்பு வழங்கினார்.

இதில் போக்சோ வழக்கில் கைதான ஆறுமுகம் மீது குற்றம் நிரூபணமானதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story