வேளச்சேரி-செயின்ட் தாமஸ் மவுண்ட் பறக்கும் ரெயில் திட்டபணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. வலியுறுத்தல்
திட்ட விரிவாக்கப் பணிகளை விரைவாக முடிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,
வேளச்சேரி - புனித தோமையார் மலை (செயின்ட் தாமஸ் மவுண்ட்) இடையிலான பறக்கும் ரெயில் (எம்.ஆர்.டி.எஸ்) பாதை விரிவாக்கத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார். இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் அவர் கூறியதாவது;-
"பறக்கும் ரெயில் போக்குவரத்துத் திட்டத்தை கடந்த 2008-ம் ஆண்டு வேளச்சேரியில் இருந்து செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை 5 கி.மீ. தூரம் விரிவுபடுத்த தென்னக ரெயில்வே திட்டமிட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 13 ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் உள்ளது.
இது தொடர்பாக கோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு வந்து பறக்கும் ரெயில் திட்ட விரிவாக்கப் பணிகளுக்குச் சாதகமாக சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
சென்னை மாநகரின் புறநகர் போக்குவரத்துத் திட்டத்தில் வேளச்சேரி-செயின்ட் தாமஸ் மவுண்ட் இடையிலான 5 கி.மீ தூரம் பிரதான மார்க்கமாக அமைந்துள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் மற்றும் தென்னக ரெயில்வே போக்குவரத்துப் பாதைகளின் இணைப்பாகவும் இத்திட்டம் அமைந்துள்ளது.
எனவே, வேளச்சேரி-செயின்ட் தாமஸ் மவுண்ட் பறக்கும் ரெயில் திட்ட விரிவாக்கப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டிய அவசரம் நிலவுகிறது. எனவே இதற்கான திட்ட விரிவாக்கப் பணிகளை விரைவாக முடிக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.