உத்தராகண்ட்: 490 மணி நேரம் போராட்டத்திற்கு வெற்றி: உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி


உத்தராகண்ட்: 490 மணி நேரம் போராட்டத்திற்கு வெற்றி: உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
x
தினத்தந்தி 28 Nov 2023 3:30 PM GMT (Updated: 28 Nov 2023 5:07 PM GMT)

உத்தராகண்ட்டில் சுங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உத்தராகண்டில் சில்க்யாரா - பர்கோட் இடையே அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம்தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில், 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்பதற்காக, அமெரிக்க தயாரிப்பான ஆகர் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் துளையிடப்பட்டது. ஆனால், அந்த இயந்திரத்தின் பிளேடு, கம்பிகளில் சிக்கி உடைந்து சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்டது. இதனால், அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு மீட்புப் பணிகள் வெற்றிகரமாக இறுதிக் கட்டத்தை எட்டியது.

இரவில் 41 தொழிலாளர்களையும் பத்திரமாக வெளியே கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடங்கியது. மீட்புப் பணிக்களத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் கயிறு, விளக்குகள், ஸ்ட்ரக்சர்கள் போன்ற உபகரணங்களுடன் சுரங்கத்தின் முன்னால் காத்திருந்தனர். சுரங்கத்தில் இருந்து வெளியே வந்த தொழிலாளர்கள் நேரடியாக ஆம்புலன்ஸுக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு அவர்களுக்கு அடிப்படையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

தேவை இருக்கும்பட்சத்தில், அவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சுரங்கத்தில் இருந்து வெளியே வரும் தொழிலாளர்கள் அனைவரும் ஒருநாள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, பரிசோதனைகளுக்குப் பின்னரே, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. 17 நாட்களுக்குப் பின், சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

முதலாவது நபர் வெளியே வந்தபோது, சுரங்கத்தின் வெளியே காத்திருந்த மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள், உறவினர்கள், பொதுமக்கள், ஓட்டுநர்கள் என அனைவரும் கைகளைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 490 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.


Next Story