உத்தரகாண்ட்; 'சார் தாம்' யாத்திரை செல்ல முன்பதிவு கட்டாயம் என அறிவிப்பு


உத்தரகாண்ட்; சார் தாம் யாத்திரை செல்ல முன்பதிவு கட்டாயம் என அறிவிப்பு
x

‘சார் தாம்’ யாத்திரை செல்வதற்கு கட்டாயமாக முன்பதிவு செய்திருக்க வேண்டும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

டேராடூன்,

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான 'சார் தாம்' யாத்திரைப் பயணம் கடந்த 10-ந்தேதி தொடங்கியது.

ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர்காலங்களில் குகைக்கோவில்கள் மூடப்பட்டு விடும். மேலும் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.

இந்த ஆண்டு யாத்திரை தொடங்கிய முதல் நாளில் கேதர்நாத் கோவிலில் சுமார் 29 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது. தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'சார் தாம்' புனித யாத்திரை மேற்கொள்வதற்காக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில் 'சார் தாம்' யாத்திரை செல்வதற்கு கட்டாயமாக முன்பதிவு செய்திருக்க வேண்டும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக உத்தரகாண்ட் மாநில தலைமைச் செயலாளர் ராதா ரடோரி அனைத்து மாநில அரசுகளுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் 'சார் தாம்' யாத்திரை செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

யாத்திரை செல்லும் பாதைகளில் காவல்துறையினர் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனை மேற்கொள்வார்கள் என்று அவர் கூறியுள்ளார். மேலும் புனித தளங்களில் இருந்து 200 மீட்டர் சுற்றளவில் மொபைல் போன்கள் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story