உத்தரகாண்ட்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 33-ஆக உயர்வு
உத்தராகாண்டில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
டோராடூன்,
உத்தரகாண்ட், லால்தாங் பகுதியில் இருந்து பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள பிரோன்கால் பகுதிக்கு நேற்று பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பிரோன்காலில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 50-க்கும் மேற்பட்டவர் அதில் பயணித்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், மலைப்பாங்கான பகுதியில் இரவு 7.30 மணியளவில் பஸ் சென்றுகொண்டிருந்த போது சிம்ரி என்ற இடத்தில் உள்ள வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாடடை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணித்த 25 பேர் நேற்று உயிரிழந்தனர். மேலும், பள்ளத்தாக்கில் இருந்து 21 பேரை மீட்புப்படையினர் மீட்டனர். இதில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், உத்தராகாண்டில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் காயமடைந்த 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என போலீசார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள்து குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்து உத்தரவிட்டார்.