உத்தரபிரதேசத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
உத்தரபிரதேசம் மாநிலத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர்.
தூங்க சென்றனர்
உத்தரபிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள ஆனந்த் நகர் ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் சந்திரா (வயது 40). இவருக்கு திருமணமாகி தேவி (35) என்ற மனைவியும், ஹர்சித் (13), அன்ஸ் (5) என 2 மகன்களும், ஹர்சிதா என்ற 10 வயது மகளும் இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கம் போல் இரவு உணவை முடித்துவிட்டு தூங்க சென்றனர்.
இடிந்து விழுந்தது
அதிகாலை 5 மணியளவில் அவர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது வீட்டின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 5 பேரும் இடிபாடுகளில் சிக்கினர். இதனிடையே காலை 8 மணியளவில் அங்கு வந்த துப்புரவு பணியாளர்கள் வீட்டின் மேற்கூரை இடிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். .
5 பேர் பலி
அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினருடன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.அவர்கள் இடிபாடுகளை அகற்றி அதன் அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். எனினும் சதீஷ் சந்திரா, அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் என 5 பேரையும் பிணமாகத்தான் மீட்க முடிந்தது. இதையடுத்து அவர்களது உடலை போலீசார் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.