உ.பி: சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் உடல் நசுங்கி பரிதாபமாக பலி!
உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் விபத்துகள் நடந்து வருகின்றன.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் விபத்துகள் நடந்து வருகின்றன.
உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தின் சந்திரபுரா கிராமத்தில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர்.
இடிபாடுகளில் சிக்கிய ஒரு குழந்தை மற்றும் அந்த குழந்தையின் பாட்டியின் நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்த அவர்கள் இருவரும் எட்டாவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று அதிகாலை மூன்று மணியளவில், மழையின் காரணமாக வீட்டின் மூலச் சுவர் இடிந்து விழுந்ததில் அதன் கீழ் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் 3:30 மணியளவில் கிடைத்தது.தகவல் அறிந்த உடனே மாவட்ட கலெக்டர் அவ்னிஷ் ராய் மற்றும் மூத்த போலீஸ் சூப்பிரண்டு ஜெய்பிரகாஷ் சிங் ஆகியோர் நிர்வாக அதிகாரிகளுடன் மாவட்ட மருத்துவமனைக்கு வந்து சம்பவம் குறித்து தகவல் பெற்று காயமடைந்த பாட்டி மற்றும் குழந்தையிடம் நலம் விசாரித்தனர்.
இடிபாடுகளில் சிக்கி 10 வயது சிறுவன் சிகு, 8 வயது அபி, 7 வயது சோனு மற்றும் 5 வயது சிறுமி ஆர்த்தி ஆகியோர் சுவரின் இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்டனர். மேலும், அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இந்த 5 குழந்தைகளின் பெற்றோர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், இந்த ஐந்து குழந்தைகளும் அவர்களின் 75 வயது பாட்டி சாரதா தேவியால் வளர்க்கப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. முன்னதாக, உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் முதல், இதே போன்று சுவர் இடிந்த விபத்துக்களில் சிக்கி பச்சிளம் குழந்தை உட்பட 15 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.