யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள்; முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகள்


யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு  முடிவுகள்; முதல் மூன்று இடங்களை  பிடித்த மாணவிகள்
x
தினத்தந்தி 30 May 2022 11:49 AM GMT (Updated: 30 May 2022 11:51 AM GMT)

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகள் ; தமிழகத்தை சேர்ந்த சுவாதி ஸ்ரீ இந்திய அளவில் 42வது இடம் பிடித்தார்.

புதுடெல்லி

மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஎஃப்எஸ் ஐஆர்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்பட்டது. 749 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் முதன்மை எழுத்துத் தேர்வு, பிரதான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடைபெற்றது.

அந்த தேர்வின் இறுதி முடிவுகளை இன்றைய தினம் மத்திய பணியாளர் தேர்வாணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.upsc.gov.in -ல் வெளியிட்டது. அதன்படி 685 பேர் நடப்பாண்டில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், 244 பேர் பொதுப் பிரிவிலும், 73 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினரும், 203 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், 15 பேர் தாழ்த்தப்பட்டவர்கள், 60 பேர் பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார். மேலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கவும் மத்திய பணியாளர் தேர்வாணையம் பரிந்துரைத்துள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளின் படி நாட்டில் முதல் மாணவியாக உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுருதி சர்மா இடம் பிடித்துள்ளார்.செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி மற்றும் ஜேஎன்யுவின் முன்னாள் மாணவி ஆவார். ஜாமியா மில்லியா இஸ்லாமியா ரெசிடென்ஷியல் கோச்சிங் அகாடமியில் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறார். இந்த ஆண்டு இந்தியாவின் முதல் மூன்று இடங்களை பெண்கள் பெற்றுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த சுவாதி ஸ்ரீ என்பவர் இந்திய அளவில் 42வது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார். 2021-ம் ஆண்டு குடிமைப் பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நாடு சுதந்திரம் பெற்று 75வது ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்று இந்தியாவின் வளர்ச்சி பயணத்தின் முக்கியமான தருணத்தில் குடிமைப் பணியில் இணைய இருப்பவர்களுக்கு தனது வாழ்த்துகள் எனவும் அதேவேளையில், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி வாய்ப்பை இழந்தவர்களின் வேதனையை உணர்வதாகவும், ஆனால் அந்த இளைஞர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்கள் எனவும் பிரதமர் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.


Next Story