சித்தராமையா ஹிட்லர் குறித்து பேசியதால் கர்நாடக மேல்-சபையில் சலசலப்பு
சித்தராமையா ஹிட்லர் குறித்த பேசியதால், கர்நாடக மேல்-சபையில் காங்கிரஸ், பா.ஜனதா உறுப்பினர்கள் இடையே காரசாரமான வாதம் ஏற்பட்டது.
பெங்களூரு:-
காரசார வாதம்
கர்நாடக மேல்-சபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு முதல்-மந்திரி சித்தராமையா பதிலளித்தார். அவர் பேசும்போது, பிரதமர் மோடியின் செல்வாக்கு குறைந்துவிட்டதாக கூறி அவர் விமர்சித்து பேசினார். ஹிட்லர் ஒரு மதவாதி என்று குறிப்பிட்டு பேசினார். அப்போது பா.ஜனதா உறுப்பினா்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து பா.ஜனதாவுக்கு எதிராக குரல் கொடுத்தனர். இதனால் சபையில் இருதரப்பினருக்கும் இடையே காரசார வாதம் ஏற்பட்டு கூச்சல்-குழப்பம் உண்டானது. அதைத்தொடர்ந்து சித்தராமையா பேசியதாவது:-
மக்களின் பாக்கெட்டுகளில் பணத்தை போட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துகிறோம். ஏழை, நடுத்தர மக்களின் பாக்கெட்டுகளில் பணம் இருந்தால் அது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இது காங்கிரசின் கொள்கை. ஆனால் பா.ஜனதா, மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை பறித்துக்கொள்கிறது. இதனால் சட்டசபை தேர்தலில் அக்கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
அரசியல் சாசனம்
கவிஞர் பம்ப, மனித சாதி ஒன்றே என்று கூறினார். இதன் அடிப்படையில் தான் கன்னட கலாசாரம் தோன்றியது. பம்ப முதல் பசவண்ணர் வரையில் உள்ள மகான்களின் ஆசைகள் தான் நமது அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ளது. ஆனால் தான் மட்டுமே சிறந்தவன் என்று கருதிய ஹிட்லர் ஒரு மதவாதி. அவர் மனித சமூகத்தின் விரோதி. ஹிட்லரை பற்றி பேசினால் பா.ஜனதாவுக்கு கோபம் வருவது ஏன்?. அவர் தனது பைத்தியக்காரத்தனமான முடிவுகளால் மனிதர்களை கொன்று குவித்தார்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.