நொய்டாவில் 9 நொடியில் தூள்தூளாக தரைமட்டமாக உள்ள பிரமாண்ட இரட்டை கோபுரம்...
நொய்டா நகரில் 100 மீட்டர் உயரம் கொண்ட மாபெரும் இரட்டை கோபுர கட்டடத்தை 28ஆம் தேதி அன்று இடிப்பதற்கான முன் ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
நொய்டா,
உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தை கட்டியுள்ளது. சுமார் 7,000 பேர் தங்கும் வசதி கொண்ட இந்த குடியிருப்பில் இதுவரை யாரும் குடியேறவில்லை. ஒரு டவரில் 32 தளங்களும் மற்றொரு டவரில் 29 டவர்களும் உள்ளன. இந்நிலையில், இந்த கட்டுமானமானது விதிகளுக்கு புறம்பானது என புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்த நிலையில், கடந்தாண்டு கட்டடங்களை வெடி வைத்து தகர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை வெடிவைத்து தகர்க்கும் பணி எடிபைஸ் இன்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. வரும் 28ஆம் தேதி கட்டடம் இடிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான பணிகளை எடிபைஸ் நிறுவனம் தயார் நிலையில் வைத்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த இரட்டை கோபுர கட்டடத்தின் அருகே உள்ள 5000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் அப்பகுதியில் இருந்த சுமார் 1,500 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. கட்டடத்தை இடிப்பதற்காக சுமார் 37,000 கிலோ வெடிபொருள்கள் பயன்படுத்தப்படவுள்ள நிலையில், 9,000 துளைகள் போடப்பட்டு வெடிப்பொருள்கள் நிரப்பப்படுகின்றன. இந்த கட்டுமானத்தின் மதிப்பீடு சுமார் 300 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், வெடிபொருள் வைத்து தகர்த்தால் இது 9 நொடியில் தூள்தூளாக தரைமட்டமாக உள்ளது. 28ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு இந்த இரட்டை கோபுரங்களை இடிக்க திட்டமிட்டுள்ளனர். இடித்தப்பின் கழிவுகளை எடுத்துச் செல்ல 1200 டிப்பர் லாரிகள் தயாராக இருக்கவுள்ளன.