மத்திய அரசின் அதிகாரபூர்வ காலண்டர்: 13 மொழிகளில் வருகிறது - மத்திய மந்திரி வெளியிட்டார்
அடுத்த ஆண்டுக்கான மத்திய அரசின் அதிகாரபூர்வ காலண்டரின் வெளியீட்டுவிழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.
புதுடெல்லி,
2023-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் அதிகாரபூர்வ காலண்டரின் வெளியீட்டுவிழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த காலண்டரை மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்கூர் வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர், 'பிரதமர் மோடியின் "அனைவருடன், அனைவரின் நலனுக்காக, அனைவரின் நம்பிக்கை" ஆகியவற்றின் பிரதிபலிப்பே இந்த காலண்டர். இது ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் கிடைக்கும். மொத்தம் 11 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்படும்.
2022-ம் ஆண்டு தூர்தர்ஷனின் இலவச 'டிஷ்' 4.3 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளை சென்றடைந்துள்ளது. பிரசார் பாரதியின் பல்வேறு அலைவரிசைகளுக்கு 2 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களும், நேயர்களும் உள்ளனர். நடப்பாண்டு மேலும் 75 சமுதாய வானொலி நிலையங்கள் தொடங்கப்பட்டதன் மூலம் நாட்டில் அதன் எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் கீழ், 290 பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கு ரூ.13.12 கோடி வழங்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தகவல் தொடர்பு பணியகத்தின் பொது இயக்குனர் மணீஷ் தேசாய் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.