மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் நடந்து கொண்ட விதம் ராணுவத்துக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியது - மத்திய மந்திரி பியூஷ் கோயல்
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் நடந்து கொண்ட விதம் ராணுவத்துக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியது என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இது குறித்து மத்திய மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானது. அவர்கள் விரக்தில் இருப்பதையே இது காட்டியது. அவையின் விதிகளை அவர்கள் மதிக்கவில்லை. அவைத் தலைவரின் வார்த்தைகளை அவர்கள் கேட்கத் தயாராக இல்லை.
எந்த ஒரு ஒழுங்கின் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. முன்னேறிச் செல்வதற்கு விடாமல் தடையை ஏற்படுத்துவது, நாசத்தை ஏற்படுத்துவது என்பதாகத்தான் அவர்களின் செயல் இருந்தது. நமது எதிர்க்கட்சிகளுக்கு நமது ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லை. இது நமது ராணுவத்துக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியது.
நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட உணர்வு சார்ந்த விவகாரங்களில் நமது நாடாளுமன்றம் உரசல் இன்றி செயல்பட எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும். ஜனநாயக மதிப்பீடுகளை எதிர்க்கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
குறிப்பாக காங்கிரஸ் கட்சி, நமது ராணுவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். இந்திய - சீன எல்லையில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும், இந்த விவகாரத்தை தொடர்ந்து எழுப்புவது ஏற்புடையது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.