ஊழலில் ஈடுபட்டவர்களை விசாரிக்க வேண்டியது புலனாய்வு அமைப்புகளின் கடமை - மத்திய மந்திரி அனுராக் தாகுர்


ஊழலில் ஈடுபட்டவர்களை விசாரிக்க வேண்டியது புலனாய்வு அமைப்புகளின் கடமை - மத்திய மந்திரி அனுராக் தாகுர்
x

சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்.பி ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாக கூறி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜராகியுள்ளார். டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள், தொண்டர்கள் புடைசூழ பேரணியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகை தந்தார்.

சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பீகார், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, புதுச்சேரி, ராஜஸ்தான் உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது.

காங்கிரஸ் போராட்டத்தை கருத்தில் கொண்டு, சில வழித்தடங்களில் போக்குவரத்தை தவிர்க்க பொதுமக்களை டெல்லி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. நேஷனல் ஹெரால்டு பதிரிகை பங்கு விற்பனை குறித்து ஏற்கனவே ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இது குறித்து பேசிய மத்திய மந்திரி அனுராக் தாகுர், "காந்தி குடும்பம்(சோனியா காந்தி) களங்கமற்றது என்றால், ஏன் இந்த கவலை? அவர்கள் ஊழலில் ஈடுபடவில்லை என்றால் எதற்காக இந்த கூச்சல்.

ஊழலில் ஈடுபட்டவர்களை விசாரிக்க வேண்டியது புலனாய்வு அமைப்புகளின் கடமை" என்று தெரிவித்தார்.


இது குறித்து மக்களவையில் பேசிய மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, "சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லையா? காங்கிரஸ் தலைவர் (சோனியா காந்தி) ஒரு சூப்பர் மனிதரா? அவர்கள் (காங்கிரஸ்) தங்களை சட்டத்திற்கு மேலானவர்கள் என்று நினைக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.



Next Story