உத்தரகாண்டில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்: முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி உறுதி
பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று புஷ்கர்சிங் தாமி தெரிவித்தார்.
மதுரா,
உத்தரகாண்ட் மாநிலம் விருந்தாவனத்தில் உள்ள வாத்சல்ய கிராமத்தில் சாத்வி ரிதம்பராவின் 60-வது பிறந்தநாள் விழா நடந்தது. இந்த விழாவில் மாநில முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். இதற்கான மசோதா விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். இது அனைத்து மதத்தினருக்குமான தனிப்பட்ட சட்டங்களின் பொதுவான குறியீடு ஆகும் என்றார்.
மேலும், ராம பக்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டமாட்டார்கள். அதேபோல் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்திருக்க மாட்டார்கள் என்று எதிர்க்கட்சிகளை அவர் விமர்சனம் செய்தார்.
முன்னதாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்திற்கான (யுசிசி) வரைவைத் தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழு இதுவரை எடுத்த முடிவுகளுக்கு டிசம்பர் 22ஆம் தேதியன்று உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.