பீகாரில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் 2 சிறுநீரகங்களையும் திருடிய டாக்டர்


பீகாரில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் 2 சிறுநீரகங்களையும் திருடிய டாக்டர்
x

பீகாரில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் 2 சிறுநீரகங்களையும் திருடிய ஆஸ்பத்திரியின் உரிமையாளரும், டாக்டரும் தலைமறைவாகிவிட்டனர்.

பாட்னா,

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுனிதா தேவி, 3 குழந்தைகளின் தாய். இவர் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு தொடர்ந்து வயிற்றுவலி இருந்து வந்ததால், மற்றொரு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்.

அந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள், சுனிதா தேவியின் 2 சிறுநீரகங்களும் நீக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். அதையடுத்து, பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அந்தப் பெண் சேர்க்கப்பட்டார். தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ள அவருக்கு தொடர்ந்து 'டயாலிசிஸ்' செய்யப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சற்று மேம்பட்டபிறகு மாற்று சிறுநீரக அறுவைசிகிச்சை செய்யப்பட வேண்டும். அதேநேரம், மேலும் சில சோதனைகளுக்குப் பின்பே அந்தப் பெண்ணின் சிறுநீரகங்கள் இரண்டும் திருடப்பட்டுள்ளனவா என்று உறுதியாக சொல்ல முடியும் என்று அந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் பெண்ணின் சிறுநீரகங்களை திருடியதாக கூறப்படும் ஆஸ்பத்திரியின் உரிமையாளரும், டாக்டரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைப் பிடிக்க 3 தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர். அந்த டாக்டர் போலி டாக்டராக இருக்கக்கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அந்தப் பெண்ணின் சிகிச்சைக்கு ஆகும் செலவு முழுவதையும் ஏற்பதாக அவரது குடும்பத்தினருக்கு மாநில அரசு உறுதி அளித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.


Next Story