தேர்தல் ஆணையம் ஷிண்டே அணிக்கு ஆதரவாக செயல்படுகிறது - கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய தாக்கரே தரப்பு!
தேர்தல் ஆணையம் எடுத்த முடிவில் பக்கச்சார்பு இருப்பதாக உத்தவ் தாக்கரே தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
மும்பை,
அந்தேரி தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் உத்தவ் தாக்கரே அணிக்கு 'தீப்பந்தம்' சின்னத்தை ஒதுக்கியது. மேலும் அவர்களின் அணிக்கு 'சிவசேனா- உத்தவ் பாலாசாகேப் தாக்கரே' பெயர் வழங்கப்பட்டது.
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் 'இரட்டை வாள்-கேடயம்' சின்னம் ஒதுக்கி உள்ளது.'பால்தாக்கரேவின் சிவசேனா' என்ற பெயரை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கியது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் எடுத்த முடிவில் பக்கச்சார்பு இருப்பதாக தாக்கரே குழு குற்றம் சாட்டியுள்ளது.இது குறித்து தாக்கரே தரப்பு, தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில் பெயர்கள் மற்றும் கட்சி சின்னங்களின் ஒதுக்கீடு எதிர்தரப்பை ஆதரித்து ஒருதலைப்பட்சமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
தாக்கரே அணி அளித்த பெயர்கள் மற்றும் சின்னங்களை தேர்தல் ஆணையம் உடனடியாக அதன் இணையதளத்தில் பதிவேற்றியது. இதனால், எதிர்தரப்பும்(ஷிண்டே அணி) கிட்டத்தட்ட அதேபோன்ற பெயர்களை தேர்வு செய்து அனுப்பியுள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் ஷிண்டே அணியினர், தங்கள் விருப்பப்படி பெயர்கள் மற்றும் சின்னங்களை அளித்த பின்னர், இந்த விவரங்கள் அனைத்தும் அதன் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தால், எதிர்தரப்பு நாங்கள் தேர்வு செய்து அளித்த விவரங்களை தெரிந்துகொள்ளவோ அல்லது அதே போன்ற பெயரையும் சின்னங்களையும் தேர்வு செய்யவோ வாய்ப்பிருந்திருக்காது.
ஆனால், ஷிண்டே அணி தேர்வு செய்து அளித்த பெயர்கள் மற்றும் சின்னங்களை தேர்தல் ஆணையம் உடனடியாக அதன் இணையதளத்தில் பதிவேற்றவில்லை. மேலும், எங்கள் தரப்புக்கு இறுதியாக தேர்தல் ஆணையம் அளித்த பெயர்கள் மற்றும் சின்னங்களை பதிவேற்றம் செய்த போது, எங்கள் சின்னத்தின் படத்தை காட்டாமால், வெறும் பெயரை மட்டும் பதிவேற்றியுள்ளது.
ஆனால், ஷிண்டே அணிக்கு இறுதியாக தேர்தல் ஆணையம் அளித்த பெயர்கள் மற்றும் சின்னங்கள் அவற்றின் பெரிய படங்களுடன் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு செயல்படுவது ஒருதலைப்பட்சமாக உள்ளதாக தாக்கரே அணி புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளது.