மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு உத்தவ் தாக்கரே வாழ்த்து
மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி பட்னாவிசுக்கு, முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மும்பை,
சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியிலிருந்து நேற்று ராஜினாமா செய்த நிலையில் ஆட்சி அமைக்க தேவேந்திர பட்னாவிசும், ஏக்நாத் ஷிண்டேவும் கவர்னர் கோஷ்யாரியிடம் உரிமை கோரினர்.
பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக ஏக்நாத் ஷிண்டேதான் மராட்டிய முதல்-மந்திரியாக பதவியேற்பார் என தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். இதனையடுத்து புதிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றுக்கொண்டார். ஏக்நாத் ஷிண்டேவுக்கு மராட்டிய கவர்னர் பகத் சிங் கோஷியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரைத்தொடர்ந்து மராட்டிய மாநில துணை முதல்-மந்திரியாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி பட்னாவிசுக்கு, முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "மராட்டிய மாநிலத்தின் புதிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் இருவராலும் மராட்டியத்தில் நல்ல பணிகள் நடக்கும் என்று நம்புகிறேன்" என்று அதில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதிவிட்டுள்ளார்.