பைக் டயருக்கு காற்று நிரப்ப மறுத்த பஞ்சர் கடை உரிமையாளர் குத்திக்கொலை
பைக் டயருக்கு காற்று நிரப்ப மறுத்த பஞ்சர் கடை உரிமையாளர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் தபொவன் ஷிவர் பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வருபவர் குலாம் முகமது ரபானி (வயது 25). இவரது கடைக்கு நேற்று மதுபோதையில் சிலர் பைக்கில் வந்துள்ளனர்.
மேலும், பைக் டயருக்கு காற்று நிரப்பும்படி குலாமை மிரட்டியுள்ளனர். பைக்கில் இருந்தவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்ததால் பைக் டயருக்கு காற்று நிரப்ப குலாம் மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் குலாமை சரமாரியாக தாக்கியதுடன் தாங்கள் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் பஞ்சர் கடைக்காரர் குலாமை குத்தியுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த குலாமை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குலாமை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.