அமர்நாத் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
அமர்நாத் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர்,
அமர்நாத் யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 43 நாள் வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஜூன் 30 அன்று தொடங்குகிறது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் கமாண்டர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முயற்சிப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கடந்த வாரம் மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாதுகாப்பான யாத்திரையை உறுதிசெய்யும் வகையில், அமர்நாத் கோவிலுக்கு செல்லும் வாகன வழித்தடங்களில் 130க்கும் மேற்பட்ட மோப்ப நாய்களை பயன்படுத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் இந்த என்கவுன்டர் நடந்துள்ளது.
என்கவுன்டர் குறித்து காஷ்மீர் காவல் துறை ஐஜி விஜய் குமார் கூறுகையில், "என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில் இந்த என்கவுன்டர் நடைபெற்றது" என்றார்.