குஜராத்தில் விநாயகர் பூஜை ஊர்வலத்தில் இரு தரப்பினர் மோதல்; 13 பேர் கைது
குஜராத்தில் விநாயகர் பூஜை ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 13 பேர் கைது செய்யப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
வதோதரா,
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை கோலாகலமுடன் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் பல இடங்களில் நடந்து வருகின்றன.
இந்த சிலைகளை பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். அவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில், குஜராத்தின் வதோதரா நகரில் பானிகேட் பகுதியில், விநாயகர் பூஜை ஊர்வலம் ஒன்று நடந்தது.
இதில், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதுபற்றி வதோதரா இணை ஆணையாளர் சிராக் கோர்டியா கூறும்போது, நிலைமை சீரடைந்து உள்ளது.
பொதுமக்கள் யாரும் புரளிகளை நம்ப வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். இந்த விவகாரம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறியுள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் இந்த ஆண்டில் ராமநவமி, அனுமன் ஜெயந்தி போன்ற விழா காலங்களில் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. டெல்லியின் ஜகாங்கீர் புரி பகுதியில் கடந்த ஏப்ரல் 16-ந்தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது மோதல் ஏற்பட்டது.
ராமநவமியின் போது கூட, ராஜஸ்தான், குஜராத், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் மோதல்கள் ஏற்பட்டன. பக்தர்கள் மீது துப்பாக்கி சூடும், கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. இதனால் பல மாநிலங்களில், ஊர்வலம் சென்ற பக்தர்கள் பலர் காயமடைந்து சமூகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது.