கேரளாவில் ஆரன்முளா படகுப் போட்டிக்கு 50 பேருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து; 2 பேர் பலி!
பாம்புப்படகு ஒன்று கவிழ்ந்ததில் அதிலிருந்த 2 பேர் ஆற்றில் மூழ்கி பலியாகினர்.
ஆலப்புழா,
கேரள மாநிலம் சென்னிதலா பகுதியில் அச்சன்கோவில் ஆற்றில் படகுப்போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்த பாம்புப்படகு ஒன்று கவிழ்ந்ததில் அதிலிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஆதித்யன் மற்றும் 37 வயதான வினீஷ் ஆகியோர் ஆற்றில் மூழ்கி பலியாகினர்.
பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளா ஸ்ரீ பார்த்தசாரதி கோவில் அருகே உள்ள பம்பை ஆற்றில் ஆரன்முலா உத்திரட்டாதி படகுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. ஆரன்முளா உத்திரட்டாதி படகுப் போட்டியில் பங்கேற்க 'பள்ளியோடம்(பாம்புப் படகு)' அச்சன்கோவில் ஆற்றில் தயார் நிலையில் இருந்தது. அந்த படகு ஆரன்முலா நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது வலியபெரும்புழ கடவுக்கு அருகில் எதிர்பாராதவிதமாக காலை 8.30 மணியளவில் படகு கவிழ்ந்தது. படகு கவிழ்ந்தபோது அதில் சுமார் 50 பேர் இருந்தனர். பலரும் நீந்தி கரை சேர்ந்துவிட்டனர். 4 பேர் மட்டும் காணாமல் போயினர்.
4 பேரில் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒருவர் நீந்தி கரை சேர்ந்துவிட்டார்.ஆற்றில் மூழ்கிய ஒருவரை தேடும் பணி நடைபெறுகிறது.வேகமாக வீசிய காற்றின் காரணமாக படகு கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.