டி.வி. நடிகை துனிஷா சர்மா தற்கொலை; ஷீசன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
டி.வி. நடிகை துனிஷா சர்மாவின் தற்கொலை வழக்கில் கைதான ஷீசன் கான் 14 நாட்கள் நீதிமன்றகாவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
மும்பை,
நடிகை துனிஷா சர்மா (வயது21) 'அலி பாபா: தாஸ்தன்-இ-காபூல்' டி.வி. தொடருக்காக கடந்த 24-ந் தேதி வசாயில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். திடீரென அவர் படப்பிடிப்பு தளத்தில் உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகையை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது முன்னாள் காதலனும், சக நடிகருமான ஷீசன் கானை (27) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணை காலம் முடிந்து இன்று போலீசார் அவரை வசாய் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோா்ட்டு அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். முன்னாள் காதலன் ஷீசன் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் டி.வி. நடிகை துனிஷா சர்மாவை மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாக அவரது தாய் வனிதா சர்மா குற்றம்சாட்டி இருந்தார். துனிஷா சர்மா மரணத்தை கொலை வழக்கமாக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.