ரூ.2 ஆயிரம் நோட்டு ரத்து செய்யப்பட இருப்பதாக கூறி ரூ.40 லட்சத்தை மாற்ற முயற்சி; தமிழகத்தை சோ்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது
பெங்களூருவில் ரூ.2 ஆயிரம் நோட்டு ரத்து செய்யப்பட இருப்பதாக கூறி ரூ.40 லட்சத்தை மாற்ற முயன்ற தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:
தமிழ்நாட்டை சோ்ந்தவர்கள் கைது
பெங்களூரு சந்திரா லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பூங்கா முன்பாக ஒய்சாலா வாகனத்தில் போலீஸ்காரர் மகேந்திரகவுடா ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது போலீஸ் வாகனத்தை பார்த்ததும், காரின் அருகே நின்று பேசிக் கொண்டு இருந்த 4 பேர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். உடனே அவர், சக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து 4 பேரையும் மடக்கி பிடித்தனர்.
அந்த காரில் சோதனை நடத்திய போது ரூ.40 லட்சம் இருந்தது. அந்த பணத்துக்குரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. இதையடுத்து, 4 பேரும் கைது செய்யப்பட்டார்கள். விசாரணையில், அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த வெற்றிவேல் (வயது 37), ஷாம் சந்தோஷ் (27), ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவை சேர்ந்த லிங்கேஷ் (53), பிரதீப் (54) என்று தெரியவந்தது.
ரூ.40 லட்சம் பறிமுதல்
இவர்களில் பிரதீப், லிங்கேஷ் ரியல்எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்கள். அவர்கள் 2 பேருக்கும் வெற்றிவேல், ஷாம் சந்தோசின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரூ.2 ஆயிரம் நோட்டு ரத்து செய்யப்பட இருப்பதாகவும், அதற்கு பதிலாக தாங்கள் கொடுக்கும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளுக்கு பதிலாக ரூ.500 நோட்டுகளை கொடுக்கும்படியும் வெற்றிவேல், ஷாம் சந்தோஷ் கூறியுள்ளனர். இதற்காக 5 சதவீத கமிஷன் தருவதாகவும் கூறி இருக்கிறாா்கள். இதையடுத்து, ரூ.40 லட்சத்திற்கு ரூ.500 நோட்டுகளை பிரதீப், லிங்கேஷ் காரில் எடுத்து கொண்டு சந்திரா லே-அவுட் வந்துள்ளனர். அதிக பணம் கிடைக்கும் ஆசையில் ரூ.40 லட்சத்தை மாற்ற முயன்ற போது 4 பேரும் போலீசாரிடம் சிக்கி இருந்தார்கள். அவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.2 ஆயிரம் நோட்டு ரத்தாக இருப்பதாக வதந்தியை பரப்பி, பணத்தை மாற்ற முயன்றது தெரியவந்துள்ளது. இருப்பினும் பண பரிமாற்றம் குறித்து 4 பேரிடமும் தீவிர விசாரணை நடந்துவருவதாக துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி தெரிவித்துள்ளார்.