நடிகை கடத்தப்பட்ட வழக்கு; நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்துசெய்யக் கோரிய மனு தள்ளுபடி!
2017ம் ஆண்டு அக்டோபரில் கேரள ஐகோர்ட்டில் திலீப் ஜாமீன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொச்சி,
மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் திலீப் 2017-ல் நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் இருக்கிறார். இந்த வழக்கில் பல்சர் சுனில் உள்பட மேலும் 6 பேர் கைதாகி உள்ளனர். திலீப்பின் 2-வது மனைவி காவ்யா மாதவனுக்கும் நடிகை கடத்தலில் தொடர்பு இருப்பது போன்ற ஆடியோ வெளியானதால் அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை அதிகாரியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக திலீப் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், கேரளாவை உலுக்கிய, 2017ஆம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப்புக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கு இன்று விசாரணை நீதிமன்றம் முன் வந்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, நடிகருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.
குற்றம் சாட்டப்பட்ட நபர், டஹ்ர்போத் ஜாமீனில் வெளியே இருப்பதால் அவர், சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்தியதாகவும், சாட்சியங்களை சிதைத்ததாகவும் அரசு தரப்பு வாதிட்டது. முன்னதாக, 2017ம் ஆண்டு அக்டோபரில் கேரள ஐகோர்ட்டில் கடும் சட்டப் போராட்டத்துக்கு பின்னர், திலீப் ஜாமீன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.