பெங்களூரு கப்பன் பார்க்கில் உள்ள மரங்களின் தகவல்களை திரட்டும் பணிகள் தாமதம்


பெங்களூரு கப்பன் பார்க்கில் உள்ள மரங்களின் தகவல்களை திரட்டும் பணிகள் தாமதம்
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு கப்பன் பார்க்கில் உள்ள மரங்களின் தகவல்களை திரட்டுவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

விதானசவுதா:

பெங்களூரு கப்பன் பார்க்கில் உள்ள மரங்களின் தகவல்களை திரட்டுவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

மரங்கள் பற்றிய தகவல்

பெங்களூரு கப்பன் பார்க்கில் ஏராளமான மரங்கள் ஒய்யாரமாக வளர்ந்து நிற்கின்றன. அந்த மரங்களின் பெயர், எந்த வகையை சேர்ந்தது உள்ளிட்ட தகவல்களை திரட்டி, கப்பன் பார்க்குக்கு வரும் மக்களுக்கு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, கப்பன் பார்க்கில் உள்ள மரங்களை பற்றிய தகவல்களை திரட்டும் பணிகள் கடந்த ஆண்டு(2021) ஜூன் மாதம் தொடங்கியது.

இந்த பணிகளை கடந்த ஜூன் மாதம் முடிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. அதாவது மரங்கள் பற்றிய தகவல்களை திரட்டி, மரங்களில் தகவல் பலகையை ஒட்டி, அதன்மூலம் மரங்கள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இடம் பெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ஓராண்டு ஆகியும் அந்த பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை.

அடுத்த மாதம் பணிகள் நிறைவு

கப்பன் பார்க்கில் ஒட்டு மெர்த்தமாக 8 ஆயிரத்து 837 மரங்கள் உள்ளன. ஒவ்வொரு மரங்களும் ஒரு விதமான தன்மை, வகையை சேர்ந்ததாகும். குறிப்பாக 197 மரங்கள் அரிய வகையை சேர்ந்தவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பன் பார்க்கில் உள்ள அனைத்து மரங்களையும் பற்றிய தகவல்களை திரட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும், அதனால் அதுபற்றி மக்களுக்கு தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தோட்ட கலைத்துறை துணை இயக்குனர் பாலகிருஷ்ணா கூறுகையில், 'கப்பன் பார்க்கில் உள்ள மரங்களைப் பற்றிய தகவல்களை திரட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அடுத்த மாதம்(டிசம்பர்) நிறைவு பெறும். அதன்பிறகு கப்பன் பார்க்குக்கு வரும் மக்கள் அங்குள்ள மரங்களை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்', என்றார்.


Next Story