பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் வெளிமாநிலத்தினருக்கு தொடர்பு இருக்கிறது. எனவே இந்த கொலை வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்படுவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு, ஜூலை: பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் வெளிமாநிலத்தினருக்கு தொடர்பு இருக்கிறது. எனவே இந்த கொலை வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்படுவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பா.ஜனதா பிரமுகர் கொலை
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா பகுதியை சேர்ந்தவர் பிரவீன் நெட்டார் (வயது 32). இவர் பா.ஜனதா இளைஞர் அணி நிர்வாக பொறுப்பில் இருந்தவர். பிரவீன் அப்பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி இரவு அவரை மர்மநபர்கள் கொடூரமான முறையில் கொலை செய்தனர். அவரது இறுதி ஊர்வலத்தின்போது வன்முறை ஏற்பட்டது. கூட்டத்தினரை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் மங்களூருவுக்கு நேரில் சென்று பிரவீன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். ரூ.25 லட்சம் நிவாரண உதவியும் வழங்கினார்.கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிவித்தார். தேவைப்பட்டால் உத்தரபிரதேச மாடலில் புல்டோசர் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அமித்ஷாவுக்கு கடிதம்
மத்திய மந்திரி ஷோபா, பிரவீன் நெட்டார் கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்ற வேண்டும் என்று கோரி உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினார். கொலையானவரின் குடும்பத்தினர் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகளும் இதே கோரிக்கையை தான் வலியுறுத்தினர். இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பிரவீன் நெட்டார் கொலை வழக்கு என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மங்களூருவில் பிரவீன் நெட்டார் கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது. இதில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களின் தொடர்பு இருப்பதால், இந்த வழக்கை என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம். விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விசாரணை தகவல்கள் வந்த பிறகு அதன் அடிப்படையில் என்.ஐ.ஏ. வுக்கு கடிதம் எழுதப்படும்.
கண்காணிப்பு கேமராக்கள்
கர்நாடக-கேரள எல்லையில் சோதனை சாவடிகளை அமைத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பதற்றமான கிராமங்களில் தற்காலிகமாக போலீஸ் மையங்கள் ஏற்படுத்தப்படும். இரவு ரோந்து பணி மேலும் தீவிரமாக்கப்படும். மேலும் கர்நாடக ஆயுதப்படை போலீசின் மேலும் ஒரு கம்பெனியை தட்சிண கன்னடாவுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளேன்.
சூரத்கல்லில் நடைபெற்ற கொலை குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், இதற்காக தனிப்படைகளை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளேன். மாவட்ட அளவில் மத தலைவர்களை அழைத்து அமைதி கூட்டங்களை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
ஹர்ஷா கொலை வழக்கு
கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி சிவமொக்காவில் பஜ்ரங்தள பிரமுகர் ஹர்ஷா படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த கொலையில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், பிரவீன் நெட்டார் கொலை வழக்கையும் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.