நாட்டின் பல்வேறு ஐகோர்ட்டுகளில் உள்ள நீதிபதிகள் 23 பேர் இடமாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை
நாட்டின் பல்வேறு ஐகோர்ட்டுகளில் பணியாற்றி வரும் 23 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டின் பல்வேறு ஐகோர்ட்டுகளில் பணியாற்றி வரும் 23 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த் எம். பிரச்சாக், பாட்னா ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவதூறு வழக்கில் 2 வருட சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி, குஜராத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தவர் நீதிபதி ஹேமந்த் எம். பிரச்சாக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரை இடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
மேலும், குஜராத் ஐகோர்ட்டில் பணியாற்றி வரும் நீதிபதிகள் அல்பேஷ் கே. கோக்ஜே, குமாரி கீதா கோபி, சமீர் ஜே. தாவே ஆகியோரும் முறையே அலகாபாத், சென்னை, ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டில் பணியாற்றும் நீதிபதிகள் அர்விந்த் சிங் சங்வான், அவ்னீஷ் ஜிங்கான், ராஜ்மோகன் சிங், அருண் மோங்கா ஆகியோர் முறையே அலகாபாத், குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அலகாபாத்தில் பணியாற்றி வரும் நீதிபதி விவேக் குமார் சிங், சென்னை ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் தெலங்கானா ஐகோர்ட்டு நீதிபதிகள் முன்னூரி லஷ்மண், எம்.சதீர் குமார், ஜி. அனுபமா சக்கரவர்த்தி ஆகியோர் முறையே ராஜஸ்தான், சென்னை, பாட்னா ஐகோர்ட்டுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கொலீஜியம் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது.