"இலாகா மாற்றம் தண்டனை அல்ல" - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு பேட்டி
இலாகா மாற்றம் என்பது தண்டனை அல்ல என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. அதில் சட்டத்துறை மந்திரியாக இருந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறைக்கு மாற்றபட்டுள்ளார். சட்டத்துறை மந்திரியாக அர்ஜூன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டுள்ளார். அர்ஜூன் ராம் மேக்வால் கலாச்சாரத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த நிலையில் அவர் சட்டத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், புவி அறிவியல் துறை மந்திரியாக கிரண் ரிஜிஜூ இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
"பல்வேறு துறைகளை கையாள வாய்ப்பு வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. சட்டத் துறையில் இருந்து புவி அறிவியல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது தண்டனை அல்ல. இது அரசின் திட்டம். பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை. எதிர்க்கட்சிகள் நிச்சயமாக என்னை விமர்சிக்கத்தான் செய்வார்கள். எதிர்க்கட்சிகள் எனக்கு எதிராக பேசுவது ஒன்றும் புதிதல்ல. முந்தைய அமைச்சகம் தொடர்பான கேள்விகளைக் கேட்க வேண்டாம், அவை இனி பொருந்தாது" என்று கூறினார்.