'ரெயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது பயங்கரவாத செயல்' - கோர்ட்டில் போலீஸ் தரப்பு வாதம்


ரெயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது பயங்கரவாத செயல் - கோர்ட்டில் போலீஸ் தரப்பு வாதம்
x

பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில் கைதான ஷாருக் சைஃபியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கடந்த 2-ந்தேதி ரெயிலில் சென்று கொண்டிருந்த பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில், நொய்டாவைச் சேர்ந்த ஷாருக் சைஃபி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை கேரளாவுக்கு அழைத்து வந்து 14 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்தனர்.

இதையடுத்து போலீஸ் காவல் நிறைவடைந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஷாருக் சைஃபி, தற்போது கோர்ட்டு காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பயங்கரவாத தொடர்பு இருக்கலாம் என கண்டறியப்பட்டு 'உபா' சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டது.

இதனிடையே இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை மற்றும் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, இந்த சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு இருக்கலாம் என உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளித்துள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள ஷாருக் சைஃபிக்கு ஜாமீன் கேட்டு அரசின் சட்ட உதவி மையம் சார்பில் கோழிக்கோடு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ரெயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது பயங்கரவாத செயல் என்பதால் 'உபா' பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அதனால் ஷாருக் சைஃபிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து ஷாருக் சைஃபியின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.




Next Story