ரீல்ஸ் எடுக்க தோழிகளுடன் சுற்றுலா சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
விடுமுறை நாளில் சகோதரி, தோழியை அழைத்து கொண்டு இந்திரா கால்வாய் பகுதிக்கு சுற்றுலாவாக சென்று, இயற்கை காட்சிகளை 3 பேரும் கண்டு களித்தனர்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் வசித்து வந்தவர் மணீஷா கான் (வயது 19). சமூக ஊடகத்தில் ரீல்ஸ் எடுத்து வெளியிடுவதில் ஆர்வம் கொண்டவர்.
இயற்கை காட்சிகள் உள்ளிட்டவற்றை படம் பிடிப்பதிலும் அவர் ஆர்வத்துடன் இருந்திருக்கிறார். விடுமுறை நாளான நேற்று, சுற்றுலா செல்ல விரும்பியிருக்கிறார். அதனால், தன்னுடைய சகோதரி நிஷா கான் மற்றும் தோழி தீபாளி ஆகியோரை அழைத்து கொண்டு, முன்ஷி புல்லியா பகுதியில் இருந்து ரிக்சா ஒன்றை வாடகைக்கு பிடித்து புறப்பட்டு சென்றார்.
அவர்கள் இந்திரா கால்வாய் பகுதிக்கு சுற்றுலாவாக சென்று, இயற்கை காட்சிகளை கண்டு களித்தனர். சென்ற இடத்தில் ரீல்ஸ் எடுக்க மணீஷா முடிவு செய்திருக்கிறார். அவர்கள் கால்வாயின் மேல் பகுதியில் நின்றபடி நடனம் ஆடியும், அதனை படம் பிடித்தபடியும் இருந்திருக்கின்றனர்.
அப்போது எதிர்பாராத வகையில் மணீஷா கால்வாய்க்குள் விழுந்துள்ளார். அதில் ஆழம் அதிகம் இருந்துள்ளது. நீரும் நிரம்பியிருந்தது. இதனால், அச்சமடைந்த நிஷா மற்றும் தோழி தீபாளி இருவரும் அவசரகால உதவி எண்ணான 112-ல் அழைத்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்து, போலீசார் குழு ஒன்று அந்த பகுதிக்கு உடனடியாக சென்றது. சம்பவம் பற்றி அறிந்து கிராமவாசிகளும் தேடுதல் பணிக்கு வந்து விட்டனர். எனினும், மீட்பு குழுவினர் நீண்டநேரம் தேடியும் மணீஷாவை மீட்க முடியவில்லை. இதுபற்றி காவல் உயரதிகாரி அஜய் நரைன் சிங் கூறும்போது, விடுமுறை நாளான நேற்று மாலை அவர்கள் சுற்றுலா சென்ற இடத்தில் இந்த விபரீதம் ஏற்பட்டு உள்ளது.
அந்த இளம்பெண்ணின் மொபைல் போனை ஆய்வு செய்ததில் வீடியோ ஒன்று கிடைத்துள்ளது. அதில், அவர்கள் அனைவரும் சேர்ந்து நடனம் ஆடியபடியும், அந்த காட்சிகளை படம் பிடித்து கொண்டும் இருந்துள்ளனர் என தெரிய வருகிறது. அப்போது திடீரென தவறி கால்வாய்க்குள் மணீஷா விழுந்து விட்டார் என அவர் கூறியுள்ளார். அவருடைய உடலை தேடும் பணி இன்றும் தொடரும் என போலீசார் கூறியுள்ளனர்.