ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 4 நாட்களுக்குப் பின் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
நிலச்சரிவின் காரணமாக 4 நாட்கள் மூடப்பட்டிருந்த ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை, இன்று மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.
ஜம்மு,
ஜம்முவில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை உட்பட பல சாலைகள் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சம்ரோலியில் தவால் பாலம் அருகே ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலையின் ஒரு பகுதி 100 முதல் 125 மீட்டர் வரைசேதமடைந்தது.
மேலும் மோர் சுரங்கப்பாதை மற்றும் பேட்டரி சாஷ்மா அருகே சாலை மூடப்பட்டது. ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி நிலச்சரிவின் காரணமாக முற்றிலும் மறைந்துவிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக, சுமார் 2,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் டிரக்குகள் சாலையில் சிக்கித் தவித்தன.
இந்த நிலையில், நிலச்சரிவால் சேதமடைந்திருக்கும் சாலைகளை சரிசெய்யும் பணிகளி தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதனை தொடர்ந்து, நிலச்சவால் நான்கு நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த 270 கிமீ நீளமுள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இருவழிப் போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று காலை இருபுறமும் (ஜம்மு மற்றும் ஸ்ரீநகர்) மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது என்றும், வாகனங்கள் சீராக நகர்கிறது என்றும் போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.