குஜராத்தில் மாணவிகளுக்கு பாரம்பரிய நடன பயிற்சி; புதுமைகளை புகுத்தும் பள்ளி
குஜராத்தில் மாணவிகளுக்கு படிப்புடன், கலைகளையும் கற்பிக்கும் நோக்கில் மிசோரம் பாரம்பரிய நடன பயிற்சி அளிக்கப்படுகிறது.
தபி,
குஜராத்தின் தபி மாவட்டத்தில் அம்பாக் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் படிக்கும் மாணவிகளுக்கு படிப்புடன், பிற மாநில கலாசாரம் மற்றும் நடனம் ஆகியவையும் பயிற்றுவிக்கப்படுகிறது.
இதுபற்றி சரஸ்வதி கன்யா வித்யாலயா என்ற பள்ளியின் ஆசிரியை ரீமா மைசூரியா செய்தியாளர்களிடம் கூறும்போது, 4 ஆண்டுகளாக இந்த மாணவிகளுக்கு, மிசோரம் பாரம்பரிய நடனம் என அழைக்கப்படும் சீரா நடனம் பயிற்றுவிக்கப்படுகிறது.
அவர்களுக்கு (பழங்குடியின மாணவிகள்) ஒரு புதிய கலாசார நடனம் அறிமுகம் செய்ய வேண்டும் என நினைத்தோம். அதன்படி இந்த பயிற்சி அளிக்கிறோம். இந்த நடன நிகழ்ச்சிகளால் ஈட்டப்படும் வருவாயானது, இந்த மாணவிகளின் நலன்களுக்கே பயன்படுத்தப்படுகிறது.
அதனால், அவர்கள் இன்னும் சிறப்புடன் செயல்படுவார்கள் என அவர் கூறியுள்ளார். இதுபற்றி ஊர்வசி ஹல்பாதி என்ற மாணவி கூறும்போது, இந்த நடனம் ஆடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. வெளியே சென்று, நடன நிகழ்ச்சியை நடத்தும்போது கிடைக்கும் பாராட்டுகள் எங்களை மகிழ்ச்சியடைய செய்கிறது என கூறியுள்ளார்.
இதேபோன்று மற்றொரு மாணவியான பிரியான்ஷி கமித் கூறும்போது, இந்த நடன நிகழ்ச்சியின்போது, மூங்கில் கம்புகளை சரியான முறையில் இயக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. இதற்காக 3 முதல் 4 மாதங்கள் வரை நாங்கள் பயிற்சி எடுத்து கொண்டோம்.
நிறைய கடின உழைப்பும், பயிற்சியும் இதற்கு தேவைப்படும். நடனம் ஆடும்போது, ஆடுபவர்களுக்கு காயம் எதுவும் ஏற்பட்டு விட கூடாது என்பதில் நாங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.