20 பள்ளி குழந்தைகளுக்கு தக்காளிக் காய்ச்சல் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கேரள மாநிலம் இடுக்கியில் 20 குழுந்தைகளுக்கு தக்காளிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இடுக்கி,
கேரள மாநிலம் இடுக்கியில் 20 குழுந்தைகளுக்கு தக்காளிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. நெடும்கன்டம் கல்லார் பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில் 20 குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் குழந்தைகளை பரிசோதனை செய்ததில் தக்காளிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
எனினும் குழந்தைகளின் உடல்நிலை திருப்திகரமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தக்காளிக் காய்ச்சல் பொதுவாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தாக்குவது இயல்பான ஒன்றுதான் என்றாலும் தற்போது 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கை, கால் மற்றும் வாயின் உள்பகுதியில் சிறு கொப்பளங்கள் மற்றும் வலியை ஏற்படுத்துதல், வாயில் உள்ள தோலில் அரிப்பு உள்ளிட்டவை தக்காளிக் காய்ச்சலின் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. தக்காளிக் காய்ச்சல் ஒரு வாரத்தில் தானாக சரியாகி விடும் என்றாலும் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் மற்றவர்களுக்குப் பரவும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென கேரள சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.