பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலைக்கான சுங்க கட்டண உயர்வு வாபஸ்; கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜனதா நடவடிக்கை


பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலைக்கான சுங்க கட்டண உயர்வு வாபஸ்; கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜனதா நடவடிக்கை
x

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலைக்கான 22 சதவீத சுங்க கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள் வாபஸ் பெறப்பட்டது. தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜனதா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது.

பெங்களூரு- மைசூரு இடையே 10 வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

22 சதவீதம் கட்டணம் உயர்வு

இந்த விரைவுச்சாலையை கடந்த மாதம்(மார்ச்) 12-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்திருந்தார். அங்கு சர்வீஸ் சாலை உள்ளிட்ட பணிகள் நிறைவு பெறும் முன்பாகவே கடந்த மாதம் 14-ந்தேதியில் இருந்தே சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கு ராமநகர், மண்டியா மாவட்ட மக்களும், கன்னட அமைப்புகள், காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தன. மேலும் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் சுங்க கட்டணம் அதிகமாக இருப்பதாக வாகன ஓட்டிகளும், லாரி உரிமையாளர்களும் கடும் குற்றச்சாட்டுகளை கூறினார்கள்.

ஏற்கனவே சுங்க கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், சுங்க கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்தும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும், நேற்று முதல் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் 22 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை அறிவித்தது.

வாகன ஓட்டிகள் எதிர்ப்பு

இந்த கட்டண உயர்வு நேற்று முதல் (ஏப்ரல் 1-ந் தேதி) அமலுக்கு வருவதாகவும் தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்திருந்தது. அதாவது கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒரு வழி பயணத்திற்கு ரூ.135 ஆக இருந்த கட்டணம் ரூ.30 உயர்த்தப்பட்டு, ரூ.165 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதுவே இருவழி பயணமாக இருந்தால் ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதாவது பழைய கட்டணத்தில் இருந்து கூடுதலாக ரூ.45 உயர்த்தப்பட்டது. சிறிய வாகனங்கள், மினி பஸ்களுக்கு ஒரு வழிக்கு ரூ.270 (ரூ.50 உயர்வு), இரு வழிக்கு ரூ.405 (ரூ.75 உயர்வு) ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

இதுபோல், சரக்கு லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கும் 22 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு இருந்தது. இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் முன்பாக வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டண உயர்வு வாபஸ்

குறிப்பாக 22 சதவீத கட்டண உயர்வுக்கு காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அத்துடன் வாகன ஓட்டிகளும் தங்களது எதிர்ப்பை சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளிப்படுத்தி இருந்தனர். பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை திறக்கப்பட்டு ஒரு மாதம் கூட ஆகவில்லை, அதற்குள் 22 சதவீத கட்டண உயர்வு செய்வது கண்டிக்கத்தக்கது என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், விரைவுச்சாலையில் சுங்க கட்டணம் 22 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த உத்தரவை வாபஸ் பெறுவதாகவும், இதற்கு முன்பாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டதோ, அதே நிலையே தொடரும் என்றும், பெங்களூரு- மைசூரு விரைவுச்சாலையில் சுங்க கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் தேசிய நெடுஞ்சாலை துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதி செய்துள்ளது.

சட்டசபை தேர்தல் காரணமா?

இதன்மூலம் நேற்று முன்தினம் உயர்த்தப்பட்ட 22 சதவீத சுங்க கட்டண உயர்வு 24 மணிநேரத்திற்குள்ளேயே வாபஸ் பெறப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள், எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு தேசிய நெடுஞ்சாலை துறை அடிபணிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், சுங்க கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் சுங்க கட்டண உயர்வு ஆளும் பா.ஜனதாவுக்கு பின்னடைவை கொடுக்கலாம் என்பதால், சுங்க கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story