இன்று 49 பேர்...!! மக்களவையில் தொடரும் சஸ்பெண்டு நடவடிக்கை
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்டு செய்யப்பட்ட மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில், கடந்த புதன்கிழமை மக்களவையில் மதியம் 1 மணியளவில் நடந்த பூஜ்யநேர விவாதத்தின்போது, திடீரென பார்வையாளர்கள் வரிசையில் இருந்து சிலர் அவைக்குள் குதித்து ஓடினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவையில் அத்துமீறலில் ஈடுபட்டது பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிக்கை அளிக்க கோரியும், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை கண்டித்தும், எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அமைதியாக இருக்கும்படி கேட்டு கொண்டார்.
எனினும், எதிர்க்கட்சிகளின் அமளியால், அவை தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட கூடிய நிலை ஏற்பட்டது. இதன்பின் மதியம் 3 மணிக்கு பின்னர், தலைவர் ராஜேந்திர அகர்வால் தலைமையில் அவை கூடியபோது, மீண்டும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர் என கூறியும், அவையின் கண்ணியம் மற்றும் மதிப்பு ஆகியவற்றை காக்கும் வகையிலும் 33 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்படுகின்றனர் என சபாநாயகர் அதிரடியாக உத்தரவிட்டார்.
இதேபோன்று மேலவையிலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களில் 45 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதனால், நேற்று ஒரே நாளில் 78 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ஒரு நாளில் இது மிக அதிக எண்ணிக்கையாகும்.
சில நாட்களுக்கு முன் தி.மு.க. எம்.பி.க்கள் உள்பட 14 பேர் மக்களவையில் சஸ்பெண்டானார்கள். இதனால், நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்டு செய்யப்பட்ட மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்தது.
எம்.பி.க்கள் சஸ்பெண்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசியவாத காங்கிரசின் சரத் பவார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலையின் முன் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அவையில் எம்.பி.க்கள் மீண்டும் இன்று அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், மக்களவையில் 49 எம்.பி.க்கள் இன்று சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அவர்களில் கார்த்தி சிதம்பரம், சுப்ரியா சுலே, சசி தரூர், டிம்பிள் யாதவ், டேனிஷ் அலி உள்ளிட்டோரும் அடங்குவார்கள். இதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சஸ்பெண்டு செய்யப்பட்ட மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.
ஒரு கூட்டத்தொடரில் அதிகளவிலான உறுப்பினர்கள் சஸ்பெண்டு செய்யப்படுவது என்பது இது முதன்முறையாகும். இதனால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் வலிமை இன்னும் குறைந்து போயுள்ளது.