போதைப்பொருள் விற்பனையை தடுக்க போலீசாருக்கு மந்திரி தினேஷ் குண்டுராவ் உத்தரவு
தட்சிண கன்னடாவில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மந்திரி தினேஷ் குண்டுராவ் உத்தரவிட்டுள்ளார்.
மங்களூரு-
தட்சிண கன்னடாவில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மந்திரி தினேஷ் குண்டுராவ் உத்தரவிட்டுள்ளார்.
போதைப்பொருள் விற்பனை
தட்சிண கன்னடா மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் முல்லை முகிலன் மற்றும் மாவட்ட போலீஸ் கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின் உள்பட உயர் அதிகாரிகள் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாவட்ட பொறுப்பு மந்திரியும், சுகாதாரத்துறை மந்திரியுமான தினேஷ் குண்டுராவ், மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் கலெக்டருக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-
தட்சிண கன்னடா மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகம் காணப்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக போதை பொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த போதைப்பொருள் விற்பனையில் யார் ஈடுபடுகிறார்கள் என்ற விவரங்களை சேகரித்து அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கடும் நடவடிக்கை எடுங்கள்
இதற்கு பெற்றோர், கல்வி நிறுவனங்கள், போலீசார் இணைந்து செயல்பட்டால் மட்டுமே முடியும். பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்கும்போது, இந்த போதைப்பொருள் விற்பனை கும்பலை கண்டுபிடித்து, அதை முற்றிலும் தடுக்க முடியும். மேலும் இதன் மூலம் ஏற்படும், கொலை, கொள்ளை, திருட்டு, மத கலவரம் போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். இந்த போதைப்பொருள் தடுப்பு விவகாரத்தில் போலீசாருக்கு தனி சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
யாராக இருந்தாலும் துணிந்து நடவடிக்கை எடுக்க உங்களுக்கு அதிகாரம் வழங்குகிறேன்.
மேலும் மத மோதல்களை தடுக்க வேண்டும். மதத்தின் பேரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டால் மட்டுமே தட்சிண கன்னடா மாவட்டம் வளர்ச்சி அடைய முடியும். இதற்கு அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.