சாமுண்டீஸ்வரி அம்மனுக்குசித்தராமையா- டி.கே.சிவக்குமார் சிறப்பு பூஜை
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 100 நாட்கள் ஆனதையொட்டி நேற்று சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
மைசூரு
சாமுண்டீஸ்வரி கோவில்
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆட்சி அமைந்து கடந்த 27-ந் தேதியுடன் 100 நாட்கள் நிறைவடைந்தது. இதையொட்டி மைசூரு சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் கர்நாடக மக்களின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசித்து பூஜை செய்ய வேண்டி முதல்-மந்திரி சித்தராமையாவும், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா 3 நாட்கள் சுற்றுப்பயணமாக மைசூருவுக்கு வந்தார். நேற்றுமுன்தினம் மாவட்ட பஞ்சாயத்து கூட்டரங்கில் கர்நாடக வளர்ச்சி பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
நேற்று மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் ஒரே காரில் சென்றனர்.
சிறப்பு பூஜை
அங்கு காங்கிரஸ் அரசு அறிவித்த 5 உத்தரவாத அட்டைகளையும் சாமுண்டீஸ்வரி அம்மன் முன்பு வைத்து, அந்த 5 உத்தரவாதங்களையும் திறம்பட நிறைவேற்றிட அருள்புரிய வேண்டி சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
மேலும் காங்கிரஸ் அரசு அமைந்து வெற்றிகரமாக 100 நாட்கள் ஆனதையொட்டியும் அவர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
பின்னர் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாளை (அதாவது இன்று) தொடங்க இருக்கும் கிரகலட்சுமி திட்டம் நல்லபடியாக நிறைவேற சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து உள்ளேன். மேலும் காங்கிரஸ் அரசு அமைந்து 100 நாட்கள் வெற்றிகரமாக நிறைவடைந்ததையொட்டியும், காங்கிரஸ் அளித்த 5 உத்தரவாத திட்டங்களை திறம்பட நிறைவேற்றிட அருள்புரிய வேண்டியும் அம்மனிடம் வேண்டிக் கொண்டேன்.
ஏழை மக்கள் பயன் அடைவார்கள்
பணக்காரர்கள் சட்டை பையில் மட்டும் பணம் இருந்தால் போதாது. ஏழை மக்களின் சட்டப் பைகளிலும் கொஞ்சமாவது பணம் இருக்க வேண்டும். பணம் இருந்தால் அவர்களது மனதில் சந்தோஷம் ஏற்படும் என்பதே காங்கிரஸ் அரசின் நோக்கம்.
அதற்காகவே காங்கிரஸ் அரசு ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தால் ஏழை மக்கள் பயன் அடைவார்கள்.
பணத்துடன் இலவச அரிசி, 200 யூனிட் இலவச மின்சாரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்தால் ஏராளமானோர் பயன் அடைந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம், டிப்ளமோ பட்டதாரிகளுக்கு தலா ரூ.1,500 ஆகிய திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும். கிரகலட்சுமி திட்டத்தால் 1 கோடியே 40 லட்சம் பெண்கள் பயன் அடைவார்கள்.
கருத்து வேறுபாடு
எனக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. எதிர்க்கட்சிகள் எங்களை பிரிக்க பார்க்கின்றன. ஆனால் நாங்கள் நெருங்கி வருகிறோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது.
இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
ஒரே காரில் வந்த சித்தராமையா, டி.கே.சிவக்குமார்
காங்கிரஸ் அரசு அறிவித்த இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரக லட்சுமி திட்டம் இன்று(புதன்கிழமை) மைசூருவில் வைத்து தொடங்கப்படுகிறது.
இந்த திட்டம் உள்பட காங்கிரஸ் அரசு அறிவித்த 5 உத்தரவாத திட்டங்களும் திறம்பட நிறைவேற்றப்பட வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் நேற்று சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
அப்போது சித்தராமையா பச்சை நிறத்திலும், டி.கே.சிவக்குமார் சிவப்பு நிறத்திலும் அம்மனுக்கு பட்டுப்புடைவை சாத்தி சிறப்பு வழிபாடு செய்தனர். முன்னதாக அவர்கள் இருவரும் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு ஒரே காரில் வந்தனர்.
முன் இருக்கையில் சித்தராமையா அமர்ந்திருக்க, பின் இருக்கையில் டி.கே.சிவக்குமார் அமர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.