புதிய கல்வி கொள்கையை உருவாக்கஒரு வாரத்தில் தனிக்குழு அமைக்கப்படும்- உயர் கல்வித்துறை மந்திரி எம்.சி.சுதாகர் பேட்டி
கர்நாடகத்தில் புதிய கல்வி கொள்கையை உருவாக்க ஒரு வாரத்திற்குள் நிபுணர்கள் தலைமையில் தனிக்குழு அமைக்கப்படும் என்று உயர் கல்வித்துறை மந்திரி எம்.சி.சுதாகர் தெரிவித்துள்ளார்.
விதானசவுதா:
பெங்களூரு விதானசவுதாவில் நேற்று உயர் கல்வித்துறை மந்திரி எம்.சி.சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நிபுணர்கள் தலைமையில் குழு
கர்நாடகத்தில் புதிய கல்வி கொள்கையை உருவாக்க நிபுணர்கள் தலைமையில் புதிதாக குழு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த தனிக்குழு அமைக்கப்படும். இந்த குழுவுக்கு யார் தலைமை வகிப்பார்கள், உறுப்பினர்கள் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்பது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா முடிவு எடுத்து அறிவிப்பார்.
மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் புதிய கல்வி கொள்கையை மாநிலத்தில் அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்கனவே அரசு ரத்து செய்திருப்பதன் காரணமாக, மாநிலத்திற்காக தனியாக புதிய கல்வி கொள்கை உருவாக்கப்படுகிறது.
அடுத்த கல்வியாண்டு
அரசால் அமைக்கப்படும் குழுவில் உறுப்பினர்களாக இருக்க சில தகுதிகள் இருக்க வேண்டும். அவர்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும், கல்வித்துறையில் உரிய ஞானம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். தற்போது பழைய கல்வி கொள்கை அமலில் இருக்கிறது. புதிய கல்வி ஆண்டில் (அடுத்த கல்வியாண்டு) புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும். அரசு கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் புதிதாக பயிற்சி மையம் தொடங்க அவகாசம் இல்லை. கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் பயிற்சி மையம் நடத்துவதாக புகார்கள் எதுவும் வரவில்லை.
கடிவாளம் போட நடவடிக்கை
மாநிலத்தில் தனியார் கல்லூரிகளில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான சீட்டுகள் அதிகரித்திருப்பது குறித்தும் புகார்கள் வந்துள்ளது. அரசின் கவனத்திற்கு வராமல் சீட்கள் உயர்த்தப்பட்டு இருப்பது குறித்து விசாரணை நடத்தி, அதற்கு கடிவாளம் போட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏனெனில் கிராமப்புறங்களில் அதிகமான மாணவர்களுக்கு கல்வி கிடைக்காமல் போய் விடும். அதே நேரத்தில் என்ஜினீயரிங் சீட்டுகளை உயர்த்தினாலும், அதற்கு தேவையான ஆய்வகங்கள், பேராசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. பற்றாக்குறைவாகவே பேராசிரியர்கள் இருந்து வருகின்றனர்.
இவ்வாறு மந்திரி எம்.சி.சுதாகர் கூறினார்.