ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா சரத் பவார்? - மம்தா சந்திப்பு


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா சரத் பவார்? - மம்தா சந்திப்பு
x

சரத் பவாரை மம்தா பானர்ஜி இன்று சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

இந்திய ஜனாதிபதியாக பணியாற்றி வரும் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூலை 21-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் யார்? என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. கேரள கவர்னரான ஆரிப் முகமது கானை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக நிறுத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும்படி 22 எதிர்க்கட்சிகள், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கும் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

மம்தா பானர்ஜி தலைமையில் நாளை டெல்லியில் நடைபெற உள்ள இந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. குறிப்பாக, மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. சரத் பவாரை எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

ஆனால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சரத் பவார் விரும்பவில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், நாளை நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தலைமை தாங்குவதற்காக மம்தா பானர்ஜி மேற்குவங்காளத்தில் இருந்து இன்று டெல்லி வந்தார்.

டெல்லி வந்த மம்தா பானர்ஜி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடும்படி சரத் பவாரிடம் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனாலும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற தனது அழுத்தமான முடிவில் இருந்து சரத் பவார் பின்வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாளை எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் சரத் பவாரை மம்தா பானர்ஜி சந்தித்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இதையும் படிக்க... ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சரத்பவாருக்கு ஆர்வம் இல்லை


Next Story