திருப்பதி ஏழுமலையான் கோவில்: இலவச தரிசன டோக்கன்கள் நாளை மீண்டும் வினியோகம்
அதிகாலை 4 மணியில் இருந்து இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் மதியம் 12 மணியில் இருந்தே கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள்
திருமலை,
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 23-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதற்காக 23-ந்தேதியில் இருந்து இன்று (திங்கட்கிழமை) வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் வழிபாட்டுக்காக (வைகுண்ட துவார தரிசனம்) இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அதற்கான இலவச தரிசன டோக்கன்கள் வினியோகம் 22-ந்தேதி மதியம் தொடங்கி 25-ந்தேதி அதிகாலை 4.27 மணியுடன் முடிந்தது. அதில் இருந்து இன்று வரை பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் வினியோகம் செய்யப்படவில்லை.
இந்தநிலையில் திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்களில் இலவச தரிசனத்துக்காக வரும் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட் டோக்கன்கள்) தரிசன டோக்கன்கள் வினியோகம் செய்யும் பணி மீண்டும் நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியளவில் தொடங்குகிறது. அதிகாலை 4 மணியில் இருந்து இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் மதியம் 12 மணியில் இருந்தே கோவிலுக்குள் சென்று ஏழுமலையானை வழிபட அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.