திருப்பதி லட்டு விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு


திருப்பதி லட்டு விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு
x

திருமலையில் கடந்த 5 ஆண்டுகளில் புனிதமற்ற பல விசயங்கள் நடந்துள்ளன என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் நடந்துள்ளது என ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன்பு குற்றச்சாட்டை கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். எனினும், இந்த குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில், பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் ஒன்றை இன்று எழுதியுள்ளார். அதில், சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளார். அந்த கடிதத்தில், அரசியல் உள்நோக்கம் கொண்ட அறிக்கைகள் பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதுடன், திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் புனித தன்மையை களங்கப்படுத்தி உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், திருப்பதி லட்டு விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் பற்றி தெலுங்கு தேச கட்சி கூறும்போது, முன்னாள் தலைவர் பூமண கருணாகர் ரெட்டி மற்றும் முன்னாள் செயல் அதிகாரியான ஏ.வி. தர்மா ரெட்டி ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளில் கோவில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளனர் என குற்றச்சாட்டை தெரிவித்து இருந்தது.

இந்த சூழலில், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கோவிலுக்கான லட்டு பிரசாதத்திற்கான நெய்யில் விலங்கின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டது தொடர்புடைய குற்றச்சாட்டுகளை பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளார்.

இதேபோன்று, அவர் கூறும்போது, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அரசாட்சியின்போது முறைகேடுகள் நடந்துள்ளன என கூறியதுடன், இந்த செயல்முறையை தூய்மைப்படுத்த போகிறேன் என்றும் கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் திருமலையில் புனிதமற்ற பல விசயங்கள் நடந்துள்ளன என்றும் கூறியுள்ளார்.


Next Story