திருப்பதியில் ஒரே நாளில் ரூ.7.68 கோடி உண்டியல் வசூலாகி வரலாற்று சாதனை..!
இதற்கு முன்பு திருப்பதியில் ஒரே நாளில் அதிகபட்சமாக ரூ.6 கோடிக்கு மேல் உண்டியல் வசூலாகி இருந்தது.
திருப்பதி,
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நேற்று நள்ளிரவு 12.05 மணி அளவில் சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த முன்னாள் முதல்-மந்திரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், முதன்மைச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
காலை 5 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இதையடுத்து ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்றவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வரும் 11-ந் தேதி வரை தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்காக ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் 20 ஆயிரம் பேரும், இலவச தரிசன டிக்கெட்டில் 50 ஆயிரம் பேரும், ஸ்ரீவாணி அறக்கட்டளையின் சார்பில் 2 ஆயிரம் பேர் என மொத்தம் 8 லட்சம் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி முதல் நாளான நேற்று இலவச தரிசன டிக்கெட் மற்றும் பல்வேறு சேவை டிக்கெட்களை பெற்ற 13 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வரவில்லை. 13 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு வராததால் தள்ளு முள்ளு இன்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நேற்று நாடு முழுவதிலிருந்து ஏராளமான முக்கிய பிரமுகர்கள் தரிசனம் செய்ததால் முன்பு எப்போதும் இல்லாத வகையில் திருப்பதி வரலாற்றில் முதல்முறையாக ஒரே நாளில் ரூ.7.68 கோடி உண்டியல் வசூலானது. 69,414 பேர் தரிசனம் செய்தனர். 18,612 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். இதற்கு முன்பு ஒரே நாளில் அதிகபட்சமாக ரூ.6 கோடிக்கு மேல் உண்டியல் வசூலாகியிருந்தது.