மணிப்பூர்: துப்பாக்கி சண்டையில் 3 பேர் பலி
மணிப்பூரில் இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் பலியானார்கள்.
இம்பால்,
மணிப்பூரில் மெய்தி, குகி இனக்குழுவினருக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் கலவரம் வெடித்தது. ஓராண்டை கடந்தும் மோதல் சம்பவங்கள் ஆங்காங்கே தற்போதும் நீடித்து வருகிறது. இந்த இனக்குழுக்களில் சிலர் குழுவாக இணைந்து தற்போது ஆயுதமேந்தி தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
அந்த குழுவினரை மத்திய அரசு பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. அதேவேளை, இந்த பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும், பயங்கரவாத குழுக்கள் இடையேயும் அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், தெங்பால் மாவட்டத்தில் உள்ள மோல்னாய் என்ற இடத்தில் இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே இன்று திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். இருப்பினும், இந்த மோதலில் 4 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதை அதிகாரிகள் தரப்பில் உறுதிசெய்யப்படவில்லை.