உலகளவில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரிப்பு - ஐ.நா பயங்கரவாத எதிர்ப்பு கூட்டத்தில் மந்திரி ஜெய்சங்கர் கவலை!


உலகளவில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரிப்பு - ஐ.நா பயங்கரவாத எதிர்ப்பு கூட்டத்தில் மந்திரி ஜெய்சங்கர் கவலை!
x
தினத்தந்தி 29 Oct 2022 12:05 PM IST (Updated: 29 Oct 2022 12:06 PM IST)
t-max-icont-min-icon

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. பயங்கரவாதிகளால் இணையம், புதிய கட்டண முறை மற்றும் டிரோன்கள்(ஆளில்லா விமானங்களை) பயன்படுத்தப்படுவதை தடுத்தல் மற்றும் கையாள்வது குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக கவனம் செலுத்தப்படும்.

இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் கிளேவர்லி உள்ளிட்ட பல நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பலர் இந்தியாவில் நடைபெறும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

இந்த நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் கூட்டத்தின் இரண்டாவது நாள் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டம் தொடங்கியவுடன், தீவிரவாதத்தில் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் உறுப்பினர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின்னர் இக்கூட்டத்தில் பேசிய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:-

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் தற்போதைய பதவிக்காலத்தில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை முதன்மையான ஒன்றாக மாறியுள்ளது. இதன் காரணமாக ஐ.நா கவுன்சில் தனது பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் இந்த சிறப்புக் கூட்டத்தை இந்தியாவில் நடத்துகிறது.

கடந்த 20 ஆண்டுகளில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பயங்கரவாதஅச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு முக்கியமான உள்கட்டமைப்புக் கலையை உருவாக்கியுள்ளது. ஆனால் அவற்றை தாண்டி, பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது, அதிலும் குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் அதிகரித்து வருகிறது.

உலகளவில் அதிகரித்து வரும் பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்த்தலாக உள்ளது.பயங்கரவாதிகள் தீவிரவாத குழுக்களின் கருவியாக இணையம், சமூகஊடக தளங்கள் மாறிவிட்டன. வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களும் அரசாங்கங்களுக்கு புதிய சவால்களை எழுப்பியுள்ளன.

பயங்கரவாத குழுக்களால் ஆளில்லா வான்வழி அமைப்புகளைப் பயன்படுத்தப்படுவது உடனடி ஆபத்தாக மாறியுள்ளன. சுதந்திரம், சகிப்புத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை தாக்க, பயங்கரவாத குழுக்கள் தொழில்நுட்பம், பணம் மற்றும் நெறிமுறைகளைப் பயன்படுத்துகின்றன.

பயங்கரவாத அச்சுறுத்தலைத் தடுக்கும் மற்றும் எதிர்ப்பதற்கான முயற்சிகளை அதிகரிக்க, ஐ.நா அறக்கட்டளை நிதியத்திற்கு, இந்தியா தன்னார்வ தொண்டாக அரை மில்லியன் டாலர்களை இந்த ஓராண்டில் வழங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story